×

யாகசாலை பூஜையுடன் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா துவக்கம்: தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூர் வந்து கந்த சஷ்டி விழாவில் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் கந்த சஷ்டி விழா நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா துவங்கியது.
2ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை நடந்தது. இந்த நடைமுறை முதல் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி 9ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோயில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 7ம் நாளான 10ம்தேதி இரவு சுவாமிக்கும், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. சஷ்டியை முன்னிட்டு வருகிற 8ம்தேதி வரை தினமும் ஆன்லைன் பதிவு மூலம் 5 ஆயிரம் பேரும், நேரடியாக வருபவர்கள் 5 ஆயிரம் பேரும் என 10 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முக்கிய நிகழ்வான 9ம்தேதி சூரசம்ஹாரம், 10ம்தேதி திருக்கல்யாணம் ஆகிய 2 தினங்கள் மட்டும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Tags : Ganda Sashti Festival ,Thiruchthur ,Yakasalam Pooja , Inauguration of Kanda Sashti Festival in Thiruchendur with Yakshala Puja: Only allowed for 10 thousand devotees daily
× RELATED கந்த சஷ்டி விழா: பழநி கோயிலில் சண்முகருக்கு திருக்கல்யாணம்